Editorial

Very Rev.Fr.C.Irudayaraj

அன்னையின் அன்பு பக்தர்களே !

 

               இயேசுவின் இனிய நாமத்திலும் அன்னையின் அரவணைப்பிலும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், அன்பையும், மகிழ்வையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருத்தலத்தின் அதிபராக இவ்விணைய தளம் வழியாக உங்களோடு உரையாடவும், பகிரவும் நம்மை இணைத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

              இவ்விணைய தளம் வழியாக அன்னையின் பக்தர்கள் தங்களது ஆன்மீக தாகத்தை தணித்துக் கொள்கிறார்கள் என்றும் நம்புகிறேன். மேலும் திருத்தலம் வளர்ச்சிக்காக தங்களால் முடிந்த உதவிகளை தாராளமாக தருகின்ற உங்கள் அனைவருக்காகவும் செபிக்கின்றேன், நன்றியையும் தெரிவித்து மகிழ்கின்றேன்.

 

               நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015, டிசம்பர் 8-ம் தேதி, அமலா உற்பவ அன்னை பெருவிழா அன்று, இறை இரக்க ஆண்டை தொடங்கி, இறை இரக்க வாயிலை திறந்து வைத்தார்கள். அதனை தொடர்ந்து அனைத்து மறைமாவட்ட பேராலயத்திலும் மறைமாவட்ட ஆயர்கள் தலைமையில் இரக்கத்தின் வாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நமது அன்னையின் திருத்தலத்திலும் நமது ஆயர் M. தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகை அவர்கள் 2015 டிசம்பர் மாதம் 20-ம் தேதி இரக்கத்தின் வாயிலை திறந்து அன்னையின் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் இறை இரக்கத்தை பெற்றுச் செல்ல அழைப்பு விடுத்துள்ளார்கள்  அதற்கு நன்றி செலுத்துவோம். நீங்கள் அனைவரும் இறைவனின் இரக்கத்தை இவ்வாயில் வழியாக பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கின்றேன்.

 

             ஆண்டவருடைய செயல்கள் அற்புதமானவை ஏனெனில் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களை இரக்கத்தோடு வழி நடத்தியுள்ளார். நீதியின் படி தண்டனைக்குரியவர்களாக இருந்தாலும் இரக்கத்தையே அவர்கள் மீது காண்பித்தார். ஆண்டவருடைய செயல்கள் அற்புதமானவை என்பதை இரக்கம், கருணை, பரிவு, பேரிரக்கம் என்ற அற்புதமான வார்த்தைகளால் நாம் காண்கின்றோம். அவருடைய அன்பை, இஸ்ராயேல் மக்கள் காணுமாறும், உணருமாறும் செய்துக் காட்டியுள்ளார். எனவே அன்பு என்பது ஆகாயத்தில் அல்ல மாறாக நம்முடைய செயல்பாட்டிலும், நடத்தையிலும், அன்றாட வாழ்விலும் வாழ்வாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு தாய் தன் பிள்ளையின் நலத்தைப் பற்றி நினைத்து செயல்படுவது போல் ஆண்டவர் நம் அனைவரின் நலத்தைப் பற்றி எண்ணி நம்முடைய மகிழ்ச்சியையும், நிறைவையுமே காண விரும்புகின்றார். எனவே நாமும் இறை இரக்கத்தின் பாதையில் பயணிக்க வேண்டுமெனில் "வானகதந்தை இரக்கமுள்ளவராக இருப்பது போல நாமும்  இரக்கமுள்ளவராக வாழ அழைக்கப்படுகின்றோம்".

 

ஆண்டவர், தன்னோடு உறையாடியதை, இறை இரக்க தூதுவரான புனித பவுஸ்டினா கூறுகிறார். " என் மீது கொண்டுள்ள அன்பை இரக்க செயல்கள் வழியாக காண்பித்தருளும். எல்லா இடங்களிலும் உள்ள சகோதர சகோதரிகளுக்கு இரக்கத்தைப் பற்றி சொல்ல வேண்டும். இவற்றிலிருந்து நீ தப்பிக்க பார்க்க கூடாது. இரக்கத்தை வெளிப்படுத்தும் மூன்று உனக்கு கொடுக்கிறேன். ஒன்று உன்னுடைய நடத்தை, இரண்டு வார்த்தை, மூன்று செபம் இந்த மூன்றிலும் இரக்கத்தின் முழுமை நிறைந்துள்ளது மட்டுமல்ல என்மீது அன்பு கொண்டுள்ளதற்கும் சாட்சியாகும்". ஏழைகளுக்கு செய்யும் உதவியை ஆண்டவர் எப்படி பார்க்கிறார் என்றால் தனக்கே செய்தது போன்று பார்க்கிறார். "சின்னஞ்சிறு சகோதர சகோதரிகளுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்". (மத்தேயு 25 : 4) மேலும் இரக்கமுடையோர்  பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் என்று இயேசு மழைப்பொழிவில் கூறியிருக்கிறார். (மத்தேயு 5 : 7)

 

   இந்த இறை இரக்க ஆண்டில் உங்கள் வானகதந்தை இரக்கமுள்ளவராக இருப்பதுபோல் நீங்களும் இரக்கமுள்ளவராக இருங்கள். (லூக்கா 6 : 36) என்ற இறைவார்த்தை வழியில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இறைத்தந்தை இஸ்ராயேல் மக்கள் மீது தமது பேரிரக்கத்தை எந்த அளவுக்கு காண்பித்தார் என்றால் இறைமக்கள் ஆண்டவரை விட்டு பிரிந்த போதும் இரக்கத்தை மன்னிப்பின் வழியாக காண்பித்து மீண்டும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்து வந்தார் என்பதை விவிலியத்தில் அறிந்துக்  கொள்கிறோம். அதே போன்று ஆண்டவர் இயேசுவும் இரக்கத்தை காண்பித்ததை சமாரியப் பெண், வரிதண்டிய மத்தேயு, பாவியான மரிய மதலேன் மேலும் ஊதாரி மைந்தன் உவமை இந்நிகழ்வுகளிலிருந்து தெரிந்துக் கொள்கிறோம். எனவே இறை இரக்க ஆண்டு, ஓர் அழைப்பு மட்டுமல்ல, நாம் பிறர்மீது கொண்டுள்ள இரக்கத்தை காட்ட சவாலாகவும் அமைகிறது. எனவே இந்த இறை இரக்க சவால் நாம் பிறர் மீது கொண்டிருக்கும்  ஆன்மீகம் சார்ந்த கடமைகள் எதுவெனில், நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பிறரின் அறியாமையை அகற்றுவது, பாவிகளை மாற வழிவகுப்பது, துன்புறுவோருக்கு ஆறுதல் தருவது, பிறர் தவறை மன்னிப்பது, தவறு செய்வோரை சகித்துக் கொள்ளுதல், வாழ்வோருக்காகவும், இறந்தோருக்காகவும் செபித்தல். இந்த  ஆன்மீக கடமைகளை மட்டும் செய்தல் போதாது, மாறாக சமூக அக்கரையோடும் இருக்க வேண்டும். எனவே பசித்தோருக்கு உணவளிப்பது, பிறரின் தாகத்தை தணிப்பது, ஆடையற்றோரை உடுத்துவது, அந்நியரை ஏற்பது, நோயாளிகளை சந்திப்பது, சிறைப்பட்டோரை சந்திப்பது மற்றும் இறந்தவரை அடக்கம் செய்வதுமாகும்.

அன்னையின் அன்பு பக்தர்களே திருத்தலத்தில் நடைப்பெறும் அனைத்து வழிப்பாட்டில் உங்களுடைய மன்றாட்டுக்களும், வேண்டுதல்களும் நினைவுக்கூறப்படுகின்றன. அன்னையின் வலிமையான பரிந்துரையால் எல்லாம் நன்றாக நடக்கும். அன்னையை நம்பியவர்கள் எவரும் வெறும் கையராக செல்வதில்லை என்பதை உணர்வோம்.

 

  அன்னையின் அன்பு பக்தர்கள் அனைவரும் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வருகின்றபோது அங்கு நடைபெறுகின்ற திருப்பலி மற்றும் செப வழிப்பாட்டில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தனிப்பட்ட விதத்தில் ஆராதனை ஆலயத்திற்கு சென்று தொடர்ந்து நடைபெறும் ஆராதனையில் பங்குப் பெற்று இறையாசீர் பெற அழைக்கின்றேன். வேளாங்கண்ணி திருத்தலம் "பசிலிக்கா" அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டதன் நினைவாக தொடங்கப்பட்ட 3 மணிக்கான ஆராதனை சிறப்பாக நடைப்பெறுகிறது. பக்தர்களின் தேவைகளையும் நலனையும் கருதி தொடர்ந்து இவ்வராதனை நடைப்பெறுகிறது. இதில் இயேசு ஆண்டவர் இறப்பின் நினைவாக வழிநடத்தப்படுகிறது, எனவே இது வல்லமையான செப வழிபாடாகும். இதிலும் பங்குப் பெற்று அன்னையின் வழியாக எல்லா வளமும் நலமும் பெற்று செல்ல அன்புடன் அழைக்கின்றேன்.

 

  நம் அனைவருக்கும் இரக்கத்தின் முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் இருப்பவர் இரக்கத்தின் அன்னை கன்னி மரியா. அவர் (மரியா) இறை இரக்கத்தை, " ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்." (லூக்கா 1 : 50) என்று தனது பாடலில் மட்டும் பாடவில்லை மாறாக, தனது உறவினரான எலிசபெத் அம்மாளுக்கு உதவி செய்யவும் விரைகிறார். அங்கு தொடங்கிய அவரது இரக்க பயணம் இன்றும் பல இடங்களில் தனது காட்சிகள் வழியாக ஆண்டவரது இரக்கத்தை காண்பித்து வருகிறார். வேளாங்கண்ணியில் அவரது இரக்கமானது பால்கார பாலகனுக்கு, மோர்கார சிறுவனக்கும், கலங்கி நின்ற மாலுமிகளுக்கும் கிடைத்தது போன்று இலட்சக்கணக்கான பக்தர்களுக்கும் கிடைக்கிறது. ஆண்டவரது கடைக்கண்  பார்வை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா வழியாக நம் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துவது மட்டுமல்ல அதற்காகவும் செபிக்கிறேன்.

           

             மேலும் இந்த இறை இரக்க ஆண்டு எல்லாருக்கும் அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கவும் சகோதர சகோதரிகளுக்காக நம் கரம் நீளவும் வாழ்த்துகிறேன்.

 

          இறை இரக்க தூதுவரான புனித பவுஸ்தினாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.